முக்கிய நகர்வில் ஈரான்! ஹோர்முஸ் நீரிணையை முழுக்கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர புதிய சட்டமூலம்
ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடாவில் கப்பல் போக்குவரத்தின் மீதான அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டை கணிசமாகக் கடுமையாக்கும் ஒரு புதிய வரைவு சட்டமூலத்தை ஈரானிய நாடாளுமன்றம் ஆய்வு செய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
“ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான மூலோபாய நடவடிக்கை” எனும் இந்த சட்டமூலம், தற்போது ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வரைவு சட்டமூலத்தின்படி, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் விரோத நாடுகளாகக் கருதும் பிற நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படும்.
கப்பல்களுக்கு அபராதம்
மேலும், இஸ்ரேலுடன் தொடர்புடைய இராணுவ மற்றும் பொதுமக்கள் சரக்குகள் செல்வதற்கும், ஈரான் “எதிர்ப்பின் அச்சு” என்று அழைக்கும் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாகக் கருதப்படும் கப்பல்கள் அல்லது சரக்குகளுக்கும் தடை முன்மொழியப்பட்டுள்ளது.

ஈரானுக்குச் சேதம் விளைவித்ததாகக் கருதப்படும் நாடுகளும் தனிநபர்களும் உரிய இழப்பீடு வழங்கும் வரை இந்த நீர்வழிப்பாதையைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், விதிமீறல்களில் ஈடுபடும் கப்பல்களுக்கு அவற்றின் சரக்கு மதிப்பில் 20 வீதம் வரை அபராதம் விதிக்கவும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |