சிரிப்பால் நாட்டை அலற வைத்த இஷாரா செவ்வந்தி - சிக்கும் அடைக்கலம் கொடுத்த நபர்கள்
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் (Nepal) காத்மாண்டுவிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த போது, இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றவியல் பிரிவு மற்றும் நேபாள காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
தற்போது இஷாரா செவ்வந்தி கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அழகு சிகிச்சைகளுக்கு அடிமை
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி கொழும்பு நீதவான் நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னர் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், நேபாளத்தில் அவருடன் கைது செய்யப்பட்ட தக்சி என்ற தமிழ் பெண்ணை போல் தனது தோற்றத்தை மாற்றிக்கொள்ள நீண்ட நாட்களாக அங்குள்ள அழகு நிலையங்களுக்கும் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
நேபாளத்தில் வசிக்கும் போது, தனது தோற்றத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாக செவ்வந்தி கூறியுள்ளார்.
அழகு நிலையங்களில் தனது பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டு, பணம் சம்பாதிக்கவும், அழகு தொடர்பான வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் நேரத்தை செலவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தனது தோற்றத்தில் காணக்கூடிய முன்னேற்றங்களைக் கவனித்த பிறகு, அழகு சிகிச்சைகளுக்கு "அடிமையாக" மாறியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர்
வெளிநாட்டில் வசித்து வரும் பாதாள உலகத் தலைவர் ஒருவர் ஒரு மாத காலம் வரை செவ்வந்தி தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில், காவல்துறை கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் "மாத்தறை ஷான்" என்பவரின் நெருங்கிய சகா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாதாள உலகத் தலைவர், கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பது விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் ஏனைய இருவர், இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
