பைடனின் இஸ்ரேல் பயணத்தில் புதிய திருப்பம் : திடீரென இரத்தானது ஜோர்தான் பயணம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இஸ்ரேல் நோக்கிய பயணத்தில் புதிய திருப்பமாக ஜோர்தானுக்கான பயணம் ரத்தாகியுள்ளது.
இன்று (18) இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள பைடன் முதலில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் பலஸ்தீன ஆதரவுக்குழுக்களை ஜோர்தானில் சந்தித்து பேசுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால்,காசா மருத்துவமனையில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக ஜோர்தான் விஜயம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொடூரமான தாக்குதல்
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் போர் 12 நாட்களாக தொடர்ந்தும் உக்கிரமடைந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் இழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (18) இஸ்ரேல் சென்று, அங்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இஸ்ரேலில் சுமார் 5 மணி நேரம்வரை தங்கியிருந்து பின்னர் அங்கிருந்து ஜோர்தான் தலைநகர் அம்மானுக்கு சென்று, அங்கு ஜோர்தானின் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்சிசி, பலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோருடன் முக்கிய ஆலோசனைகளை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஹமாஸின் கொடூரமான தாக்குதலை எதிர்கொள்ளவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் நான் இன்று இஸ்ரேலுக்குச் செல்கிறேன் என்று பைடன் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.
அதன் பின்னர் தலைவர்களைச் சந்திக்கவும், மனிதாபிமான தேவைகளை நிவர்த்தி செய்யவும் நான் ஜோர்தானுக்குச் செல்வேன் அங்கு பலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஹமாஸ் நிற்கவில்லை என்பதை அவர்ளுக்கு தெளிவுபடுத்துவேன் என்றும் அவர் மேலும் பதிவிட்டிருந்தார்.
காசாவில் குண்டுவெடிப்பு
இவ்வாறிருக்கையில் காசாவில் உள்ள மருத்துவமனையில் திடீரென நடந்த குண்டுவெடிப்பில் 500 பேர் உயிரிழந்து புதிய பிரச்சினை வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து ஜோர்தான் சென்று பலஸ்தீன ஆதரவு தலைவர்களை சந்தித்து பேசுவதாக இருந்த திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கைவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காசா மருத்துவமனையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு குறித்து டுவிட்டர் பக்கத்தில் தனது கவலையையும் ஜோ பைடன் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.