இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் : மேலும் 2 நாட்களுக்கு நீடிப்பு
இரண்டாம் இணைப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தமானது நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கத்தார் தெரிவித்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான நான்கு நாட்களுக்குரிய தற்காலிக மோதல் தவிர்ப்பு நிலை இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், அதனை மேலும் நீடிக்கும் வாய்ப்புகள் குறித்து இரண்டு தரப்புக்களும் ஆய்வு செய்துவருகின்றன.
இஸ்ரேலியர்களும், பலஸ்தீனர்களும் நிம்மதியாக வாழ நீண்ட கால தீர்வை நோக்கி முன்னேறும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்திய அதேவேளை, இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நீண்டகால போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் அழைப்பு விடுத்துள்ளார்.
போர் நிறுத்த நீடிப்பு
ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே வெடித்த இந்தப் போர் கடந்த 3 நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், இன்று நான்காவது நாளாக அது முடிவுக்கு வரவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் இரண்டு தரப்புக்களில் இருந்தும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மேலும் சில பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு ஏதுவாக போர் நிறுத்தம் இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என ஊகிக்கப்படுகிறது.
அரசியல் தீர்வை முதல் படி
இந்நிலையில், இந்த நான்கு நாள் போர்நிறுத்தம் அரசியல் தீர்வை நோக்கிய முக்கியமான முதல் படி என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் இன்று ஸ்பெயினில் இடம்பெற்ற மத்தியதரைக் கடல் பிராந்திய மன்றத்திற்கான 8ஆவது ஒன்றிய கூட்டத்தில் உரையாற்றியபோது குறிப்பிட்டுள்ளார்.
நாளை,போர் இடைநிறுத்தம் முடிவடைவதால் இன்று முதல் அரசியல் செயல்முறையை எவ்வாறு தொடர்வது என சிந்திக்கத் தொடங்க வேண்டுமெனவும் பொரெல் கூறியுள்ளார்.