ஹமாஸுக்கு மிரட்டல் விடுத்த இஸ்ரேல் : வெடிக்க போகும் போர்
ஹமாஸ் (Hamas) மீது புதிய போரை தொடங்குவதாகவும், காஸாவில் (Gaza) இருந்து பலஸ்தீனியர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் இஸ்ரேல் (Israel) எச்சரித்துள்ளது.
அமெரிக்கா (United States) மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்று ஹமாஸ் அமைப்பு கூறிய சிறிது நேரத்திலேயே இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறித்த பதிலை வெளியிட்டுள்ளார்.
மேலும், பணயக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்க மறுத்தால், தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
கடந்த மாதம் நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை காப்பாற்ற கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் போராடி வருவதுடன், ஹமாஸ் படைகளின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் கெய்ரோவில் இருப்பதாகக் கூறியுள்ளது.
இந்த போர் நிறுத்தம் 15 மாதங்களுக்கும் மேலான சண்டையை பெருமளவில் நிறுத்தியுள்ளது, மேலும் இஸ்ரேலிய காவலில் உள்ள பலஸ்தீனியர்களுக்கு ஈடாக இஸ்ரேலிய கைதிகள் சிறிய குழுக்களாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளனர்.
ஆனால் தற்போது 42 நாள் முதல் கட்ட ஒப்பந்தமானது, அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி
போர் நிறுத்தத்தின் அடுத்த கட்டம் குறித்து இன்னும் உடன்படாத இரு தரப்பினரும், மீறல்கள் குறித்து பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர், இது போர் மீண்டும் தொடங்கக்கூடும் என்ற கவலையைத் தூண்டியுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை (15.02.2025) ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்கத் தவறினால் இஸ்ரேல் தனது போரை மீண்டும் தொடங்கும் என்று காட்ஸ் எச்சரித்துள்ளார்.
ஹமாஸ் படைகளின் முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஹமாஸ் படை
முன்னதாக, காஸாவைக் கைப்பற்றி, அதன் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஜோர்தான் அல்லது எகிப்துக்கு மாற்ற ட்ரம்ப் திட்டமிட்டு வருகிறார்.
இது சர்வதேச சட்டத்தை மீறும் நடவடிக்கை என்று நிபுணர்கள் கூறுகின்ற நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதை புரட்சிகரம் என்று வரவேற்றுள்ளார்.
மேலும், காஸா பகுதி பலஸ்தீன மக்களை மொத்தமாக நாடு கடத்தும் டொனால்டு ட்ரம்பின் திட்டத்திற்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)