காஸா மீதான தாக்குதலில் புதிய வியூகத்தை கையாளும் இஸ்ரேல்!
போர் நிறுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் தொடங்கியிருக்கும் காசாவின் மீதான தாக்குதலில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கோஸ்பெல் எனப் பெயரிடப்பட்டுள்ள இஸ்ரேலின் இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பானது தாக்க வேண்டிய இலக்குகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
கோஸ்பெல், முதன்முதலில் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 11 நாள் போரில் பயன்படுத்தப்பட்டது. இயந்திர வழி கற்றல் மற்றும் மேம்பட்ட கணினி தொழில்நுட்பத்தின் மூலம் இராணுவத்துக்கான இலக்குகளை உருவாக்கிக் கொடுக்கும் திறன் கொண்டதாக இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இலக்குகளை உருவாக்குகிறது
போர் நிறுத்தத்துக்குப் பிறகு முழுவீச்சில் தொடங்கியிருக்கும் இந்தத் தாக்குதலில், இஸ்ரேல் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போரில் ஈடுபட்டு வருகிறது.
இந்த அமைப்பில், உள்ளீடுகளின் அடிப்படையில் மிக விரைவாகவும் தானியங்கி முறையிலும் இலக்குகளை கோஸ்பெல் உருவாக்குகிறது.
இவை உளவுப் பிரிவின் கணினி தருகிற பரிந்துரைகள் மற்றும் அதிகாரிகளின் கண்டறிதல் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.
மேலும், கோஸ்பெல் அமைப்பு, பயங்கரவாதிகள் என சந்தேகத்துக்குரிய 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேரின் பட்டியலை உருவாக்க உதவியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவிக்கிறது.
இலக்குகளின் அளவு அதிகரிப்பு
”எந்த மனிதராலும் முடியாதளவுக்கு மிகப்பெரிய அளவிலான தகவல்களை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கவும் அதன் அடிப்படையில் இலக்குகளை நிர்ணயிக்கவும் முடிகிறது” என முன்னாள் பாதுகாப்பு அதிகாரி அவிவ் கோசவி கார்டியன் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், 2021 போரில் அதற்கு முன்வரை ஆண்டுக்கு 50 இலக்குகள் என நிர்ணயித்த இலக்குகளின் அளவை செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, நாளொன்றுக்கு 100 இலக்குகள் என்கிற அளவுக்கு அதிகரித்ததையும் அவிவ் குறிப்பிட்டார்.
அனால் போர்களில் இத்தகைய தானியங்கித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மனித குலத்துக்கு பாதகமான விளைவுகளை உருவாக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.