தமிழரசிடமிருந்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு பறந்த அறிக்கை
இலங்கை தமிழரசுக் கட்சியினர் (ITAK) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு அறிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
குறித்த அறிக்கையானது தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் 8 பேரின் கையொப்பத்துடன் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்தவகையில், சி.வி.கே. சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், எஸ். சிறீதரன், ஜி.சிறிநேசன், கே.கோடீஸ்வரன், சாணக்கியன் ராசமாணிக்கம், கே.எஸ். குகதாசன், து. ரவிகரன் ஆகியோர் குறித்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்களாக
1. செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் ஒரு சிறிய பகுதியில் 150 எலும்புக்கூடு எச்சங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்னும் பெரிய அளவிலான அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட வேண்டிய பகுதிகள் உள்ளன. அதன் மூலம் இனப்படுகொலை செயல்கள் மட்டுமல்ல, இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றுகளும் பெருகி வருகின்றன.
இந்த சூழலில், மியான்மர் வழக்கைப் போலவே விசாரணைகளை அமைப்பதற்காக இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதை தீவிரமாக பரிசீலிக்குமாறு உறுப்பு நாடுகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
2. போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமைகள் சட்ட மீறல்கள் போன்றவற்றைத் தவிர, அதற்கு மேல் இனப்படுகொலை மற்றும் இனப்படுகொலை நோக்கத்தை சுட்டிக்காட்டும் ஆதாரங்களை சேகரிப்பதையும் இலங்கை பொறுப்புக் கூறல் திட்ட அலுவலகத்தின் நோக்கமாக விரிவுபடுத்த வேண்டும்.
இலங்கை பொறுப்புக் கூறல் திட்ட அலுவலகத்தின் இந்த ஆதாரங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை விசாலமான நோக்கத்துடன் தொடரப்பட வேண்டும். மேலும் திட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட வேண்டும்.
3. பாதுகாப்பு கவுன்ஸில் தீர்மானத்தின் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றாலும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் பரிந்துரைத்தபடி ரோம் சட்டத்தில் கையெழுத்திட்டு அங்கீகரிக்க இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.
4. மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, தமிழ் மக்களுடன் புதிதாக பேச்சு நடத்தி, இணக்கம் கண்டு, வடக்கு - கிழக்கில் விரிவான அதிகாரப் பகிர்வுடன் கூடிய புதிய சமஷ்டி அரசமைப்பை இயற்ற இலங்கையை தொடர்ந்து வற்புறுத்த வேண்டும். உடனடி நடவடிக்கையாக, மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.” என்பன அமைந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





