யாழ்- சென்னை விமானசேவை - அடுத்த கட்ட திட்டம் என்ன - வெளிப்படுத்திய அமைச்சர்
இந்தியாவின் சென்னைக்கும் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான நேரடி விமான சேவை 2 வருட காலப்பகுதியின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ திங்கட்கிழமை (12) தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, “இதற்கு முன்னர் இந்தியாவிற்கு விமானத்தில் செல்வதில் வடபகுதி மக்கள் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அவர்கள் சுமார் ரூ. 90,000 செலவழிக்க வேண்டியிருந்தது.சாலை வழியாக 08 மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்து கொழும்பை சென்றடையவும், பின்னர் இந்தியாவிற்கு விமானத்தில் செல்லவும், இன்னும் 2 மணிநேரம் ஆகும்.
வடக்கு மக்களின் பயண தடங்கல்கள் நீக்கம்

எனினும், சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் மீண்டும் பயணிகள் விமானசேவை ஆரம்பிக்கப்படுவதானது வடக்கில் உள்ள மக்களின் நீண்ட பயணத்தை பல வழிகளில் எளிதாக்க உதவும் என்று அவர் கூறினார். இது சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் உதவும் என்று குறிப்பிட்ட அவர், பலாலி, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்துக்கும் இடையில் உள்நாட்டு விமானச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கும் இரத்மலானைக்கும் இடையிலான விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும் இரத்மலானைக்கும் இடையிலான விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அலையன்ஸ் எக்ஸ்பிரஸ் இந்தியாவுடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வினீத் சூட், அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் சிஓஓ அம்ரேஷ் சௌத்ரி மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மண்ணு ஆனந்த் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகவும் சுற்றுலா அமைச்சர் தெரிவித்தார்.
மூன்று வாரங்களில் Duty-free operations
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் Duty-free operations அடுத்த மூன்று வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி பயணிகள் விமான சேவையை தொடங்குவதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு வழங்கிய ஆதரவிற்காக இலங்கையின் சுற்றுலா அமைச்சர் மேலும் தனது நன்றியைத் தெரிவித்தார்.