யாழ். குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
பயணக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் யாழ். மாவட்ட மக்களை தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு செல்லுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் தற்போதைய கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணியின் இணைப்பாளர் என்ற ரீதியில் யாழில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசிய நிலை காணப்படுகின்றது.
யாழ். மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமையானது ஏனைய இடங்களோடு ஒப்பிடும்போது கட்டுப்பாட்டில் உள்ளது. யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த வருடம் கொரோனா 1ஆவது அலையில் 17 தொற்றாளர்களும், இரண்டாவது அலையில் 890 தொற்றாளர்களும், தற்போதுள்ள மூன்றாவது அலையில் 1398 நபர்களும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.
யாழில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு பட்ட செயற்பாட்டினை இராணுவத்தினரின் மூலம் முன்னெடுகின்றோம். எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது.
யாழ். மாவட்ட மக்களே பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையற்று வீதிகளில் நடமாடாது வீடுகளில் இருங்கள்.
அத்தோடு உங்களுக்கு கொரோனா நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் அவ்வாறு செயற்படுவதன் மூலம் உங்களையும் உங்கள் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.