யாழில் ஆரம்பித்த “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி
யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடாத்தப்படும் “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி இன்றைய தினம் (29) ஆரம்பமாகியுள்ளது.
சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும் அவற்றிற்கான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் முகமாகவும் குறித்த கண்காட்சி இன்றும்(29) நாளையும்(30) யாழ்ப்பாணம் - நல்லூர், முத்திரைச்சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இக் கண்காட்சியானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்தல்

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதோடு, மேலதிக அரசாங்க அதிபர் (காணி), நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் கமலகுமாரி கருணாநிதி, தொழிற்துறை திணைக்களத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் நூறு வரையான முயற்சியாளர்கள் பங்கேற்றுள்ளதுடன் இதனைப் பார்வையிட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு தரமான உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்து பயன்பெறுமாறும் யாழ் மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக ஒவ்வொரு வார இறுதியிலும் மாவட்ட செயலகத்தினால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.








