தமிழக முதல்வர் விஜய்யிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் அவசர கோரிக்கை!
புதிய தமிழக முதல்வர் விஜய், இந்தியக் கடற்றொழிலாளர்கள் எமது கடல்வளத்தைச் சுரண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் சம்மேளனத் தலைவர் மரியதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவ கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்று (19-05-2026) ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மீன்பிடி தடைக்காலம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜயிற்கு கடற்றொழில் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு அவரிடம் விநயமாகச் சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறோம்.
தமிழ்நாட்டில் இருந்து எல்லை தாண்டும் இந்தியக் கடற்றொழிலாளர்களால் இலங்கை வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எமது கடல்வளத்தை அழிப்பதோடு எமது கடற்றொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான வலைகளையும் நாசம் செய்துவிடுகிறார்கள்.
தற்போது மீன்பிடி தடைக்காலம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் தடைக்காலம் நிறைவடைவதாக அறிகிறோம்.
ஆகவே, எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி உள்நுழையும் இந்தியக் கடற்றொழிலாளர்களைக் கட்டுப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |