யாழ். பருத்தித்துறை மரக்கறிச் சந்தைக்கு நகரசபையால் பூட்டு
யாழ். பருத்தித்துறையில் (Point pedro) இதுவரை இயங்கி வந்த மரக்கறிச் சந்தைக்கு பருத்தித்துறை நகரசபையால் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டுள்ளது.
பருத்தித்துறையில் மரக்கறி சந்தையை சுமார் 200 மீட்டர்கள் தொலைவில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மரக்கறி வியாபரிகள் வியாபரத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்து நேற்று வரை இயங்கி வந்த சந்தை கட்டிடம் நகரசபையால் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றில் வழக்கு தாக்கல்
இந்நிலையில் வியாபாரிகள் தமது பொருட்களை பழைய சந்தைக்குள்ளிருந்து வெளியே எடுத்துவர முடியாத நிலையில் உள்ளனர்.
இதேவேளை ஒரு சில மரக்கறி வர்த்தகர்கள் புதிய சந்தை கட்டிட தொகுதியில் வியாபராத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய சந்தைக்கு மரக்கறி வியாபரத்தை மேற்கொள்ளுமாறு சில மாதங்களுக்கு முன்னர் பருத்தித்துறை நகரசபையால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து மரக்கறி வர்த்தகர்களால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்தவகையில் அந்த வழக்கும் எதிர்வரும் 20/06/2025 திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம்
இந்த நிலையிலேயே பருத்தித்துறை நகரசபையால் நேற்றையதினம் திடீரென அறிவித்தல் சுவரொட்டி மூலமும், ஒலிபெருக்கி மூலமும், மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டமையால் அதிகமான மரக்கறி வியாபாரிகள் வியாபார நடவடிக்கையிலிருந்து விலகியிருப்பதுடன் ஒரு சில வர்த்தகர்கள் புதிய கட்டிட தொகுதியில் வியாபரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய மரக்கறி சந்தை அமைந்துள்ள பகுதி தற்போதுவரை இயங்கிவந்த சந்தையிலிருந்து சுமார் 200M தொலைவில் உள்ளது.
அது ஒரு ஒருவழிப்பாதை ஆகும். அவ்வீதியால் மீன்சந்தைக்கு செல்கின்றபோது போக்குவரத்து நெரிசல், தரிப்பிட வசதி குறைவுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
