இணையத்தளம் மூலம் விடுதலைப்புலிகளை ஊக்குவித்தமை தொடர்பில் யாழில் பெண் உட்பட இருவர் கைது!
தமிழீழ விடுதலைப்புலிகளை ஊக்குவிக்கும் வகையில் யூடியூப் அலைவரிசை மற்றும் இணையதளம் ஒன்றை முன்னெடுத்து சென்ற பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யூடியூப் மற்றும் இணையத்தளம் ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகளை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகள் இவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
35 வயதான பெண் மற்றும் 36 வயதான ஆண் ஆகியோரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலான செய்திகள் குறித்த யூடியூப் மற்றும் இணையத்தளம் ஊடாக வெளியிடப்பட்டு வந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யூடியூப் மற்றும் இணையத்தளம் செயற்படுத்தப்பட்ட இடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அந்த இடத்துக்கு பொறுப்பாக செயற்பட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இருவரும் கைது செய்யப்பட்ட இடத்தில் இருந்து 5 மேசைக் கணினிகள் மற்றும் 5 மடிக் கணினிகள் உள்ளிட்ட உபகரணங்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கமைய, குறித்த இருவரும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு அமைய தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.