யாழில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதி கோமா நிலையில்!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேல் கோமா நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான உண்மையை சிறைச்சாலை நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும் என கைதியின் சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (5) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
11 நாட்கள் விளக்கமறியல்
அவர் மேலும் கூறுகையில், நாங்கள் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள். எனது அண்ணா சிவராமலிங்கம் தர்சன் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு செல்லாததால், புதுக்குடியிருப்பு காவல்துறையால் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

மறுநாள் 7ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 11 நாட்களுக்கு அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனையடுத்து அவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார், அந்நிலையில் மறுநாள் 8ஆம் திகதி எனக்கு யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “அண்ணா மாடியில் இருந்து தவறி விழுந்ததால், சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என கூறியுள்ளார்.
நான் அன்றைய தினம் மாலையே போதனா வைத்தியசாலைக்கு சென்றபோது, 30ஆம் இலக்க விடுதியில் அண்ணா அனுமதிக்கப்பட்டு கைவிலங்குடன் சிகிச்சை பெற்ற நிலையில் இருந்தார். தலையில் காயம் ஏற்பட்டு 4 தையல் போட்டுள்ளதாக கூறினார்கள்.
அண்ணாவிடம் என்ன நடந்தது என கேட்டபோது “எனக்கு அடிச்சு போட்டாங்க” என்று சொன்னார்.
அதற்கு மேல் பேச காவலுக்கு நின்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் விடாமல், என்னை அங்கிருந்து அனுப்பினார்.
தொலைபேசி அழைப்பு
மறுநாள் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அண்ணாவுடன் கதைத்தபோது, அவரின் கதைகள் மாறாட்டமாக இருந்தது. பின்னர் மதியம் தலையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் எல்லாம் சரி என கூறி மாலையே வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல வைத்தியசாலை நிர்வாகம் அனுமதித்தது.
நான் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக அண்ணாவிற்கு பிணை விண்ணப்பம் செய்ய சட்டத்தரணி ஊடாக ஏற்பாடு செய்திருந்தேன். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அண்ணாவிற்கு திடீரென வலிப்பு வந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று. நான் உடனே அப்பாவை யாழ்ப்பாணம் அனுப்பி விட்டு, முல்லைத்தீவு நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனித்தேன்.
யாழ்ப்பாணத்துக்கு சென்ற அப்பா சிறைச்சாலை சென்று அண்ணாவை பற்றி கேட்டபோது, மாலை வரை அவரை சிறைச்சாலையில் காத்திருக்க வைத்தனர். பின்னர் அப்பா மாலை 6 மணிக்கு முல்லைத்தீவு பேருந்து புறப்பட்டுவிடும் என சிறைச்சாலையில் இருந்து, அண்ணாவை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் வீடு திரும்பினார்.
மறுநாள் அதான். அண்ணா யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்து, வைத்தியசாலைக்கு சென்று பார்த்தோம்.
11ஆம் திகதியில் இருந்து கோமா நிலையில் அண்ணா இருக்கிறார். 7 நாட்களுக்கு மேல் அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருக்க முடியாது என கூறி விடுதிக்கு மாற்றியுள்ளனர்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |