தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய யாழ்ப்பாண நபர் பிணையில் செல்ல அனுமதி
தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் பிணையில் செல்ல அனுமதிக்கபட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், மாசியப்பிட்டி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த 50 வயதுடைய கந்தசாமி கிருஷ்ணகுமார் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி விமானம் மூலம் தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பியபோது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை
கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர், ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார்.

பின்னர் திருச்சி சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாயகம் திரும்பியிருந்தார்.
இவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கொன்று நிலுவையில் உள்ள நிலையில், இன்று வியாழக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவர் சொந்தப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 2026 நவம்பர் 12ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |