யாழில் பாடசாலை நற்பெயருக்கு களங்கம்: வெடித்தது போராட்டம்
பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முன்னாள் பழைய மாணவர் சங்க நிர்வாகிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மற்றும் அதே பாடசாலையின் பணியாற்றும் அவரது மனைவியான ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுமே யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முறையற்ற அல்லது சட்ட விரோதமாக பாடசாலையால் நிதி சேகரிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்துவதற்காக இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது யாழ் வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களினால் இன்றையதினம்(10) காலை இடம்பெற்றுள்ளது.
போராட்டம்
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், பாடசாலையில் வாயிலில் இருந்து ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வடமராட்சி வலய கல்வி அலுவலகம் வரை சென்று வலய கல்வி பணிப்பாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டு போராட்டம் நிறைவடைந்துள்ளது.
குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் இது தொடர்பில் தான் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்த நிலையில் அங்கு விரைந்த வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் மாணவர்கள் ஆசிரியர்களுடன் பேசி தான் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் சில மணி நேரங்களின் பின் வகுப்புக்கள் சுமுகமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |