போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிலவும் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு காணவேண்டும் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று (28) யாழ் பல்கலைக்கழக (University of Jaffna) நுழைவாயிலுக்கு முன்னால் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் குறித்த போராட்டம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விசாரா பணியாளர் வெற்றிடங்கள் 355 காணப்படுகின்றபொழுதிலும் 117 வெற்றிடங்களே நிர்வாகத்தினால் கோரப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
வெற்றிடங்களை நிவர்த்தி செய்தல்
அத்துடன் பல்கலைக்கழக சுற்றுநிருபத்திற்கு முரணாக தனியார் நிறுவனங்களூடாகவும் ஊழியர்கள் உள்வாங்கப்பட்டு சேவை ஒப்பந்தத்தினூடாக நியமனம் செய்யப்படுவது தவறு எனவும் சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே இந்த முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் பல்கலைக்கழக பேரவைக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டும் அவை புறக்கணிக்கப்பட்டதால் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
இந்தநிலையில் உடனடியாக வெற்றிடங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படவேண்டும் எனவும் இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகளுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர்
இதேவேளை போராட்டத்தின் ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அத்துடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்