யாழில் காவல்துறையினர் செய்த சம்பவம்: தீயாய் பரவிய காணொளி - வெளியானது காரணம்!
யாழ்ப்பாணத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்று வீடொன்றின் கதவை காவல்துறையினர் எட்டி உதைப்பது போன்ற சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து இலங்கை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, நெல்லியடி பகுதியில் ஒரு நபர் அங்கீகரிக்கப்படாத இறைச்சி கூடத்தை நடத்தி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, நெல்லியடி காவல்துறை திங்கட்கிழமை (மார்ச் 24) சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றபோது, வீட்டின் பின்னால் அமைக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத இறைச்சி கூடத்தையும், ஒரு நபர் கொல்லப்பட்ட கன்றுக்குட்டியை வெட்டுவதையும் அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
கைது முயற்சி
அதன்போது, சந்தேக நபரைக் கைது செய்ய அதிகாரிகள் முயன்றபோது, அவர் வீட்டிற்குள் ஓடி ஒரு அறைக்குள் தன்னைப் பூட்டிக் கொண்டதால் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் வெளியே வர மறுத்துள்ளார்.
சந்தேக நபர் அறையை விட்டு வெளியே வருவதற்கு மறுத்ததால், ஒரு காவல்துறை அதிகாரி, அவரைக் கைது செய்ய கதவை உதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, அண்டை வீட்டாராக அடையாளம் காணப்பட்ட பெண்கள் உட்பட ஒரு குழு, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால், நெல்லியடி காவல்துறை பொறுப்பதிகாரி அந்த இடத்திற்கு விரைந்துள்ளார்.
காவல்துறை விசாரணை
அதனை தொடர்ந்து, அங்கீகரிக்கப்படாத இறைச்சிக் கூடத்தை நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 44 வயது நபர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் அவருக்கு ரூ. 30,000 அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்றை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டபோது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பெண்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மற்றவர்களைக் கைது செய்ய நெல்லியடி காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாவும் அதே நேரத்தில் வழக்கு ஏப்ரல் 04, 2025 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
