புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை
புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவுக்கு ஐந்தரை ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவு சிலாபம் மேல் நீதிமன்றத்தால் இன்று (15) வழங்கப்பட்டுள்ளது.
ஆராச்சிகட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய வழக்கில் ஜகத் சமந்தவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 இலட்சம் இழப்பீடு
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரர் ஜகத் சமந்த மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாக்குதலுக்கு உள்ளான பிரதேச செயலாளருக்கு ரூபாய் 10 இலட்சம் இழப்பீடு வழங்குமாறு ஜகத் சமந்தவுக்கு உத்தரவிட்டுள்ளது.
அந்த தொகையை செலுத்தத் தவறினால், மேலும் 24 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2024 ஜனவரி 25ஆம் திகதி கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சனத் நிஷாந்த உயிரிழந்ததால், இன்று (15) அவரது சகோதரர் ஜகத் சமந்த மட்டுமே நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் தரப்பினரின் வாதங்களை ஆராய்ந்த பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |