இலங்கை-ஜப்பான் உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை !
இலங்கையில் பசுமை மற்றும் டிஜிட்டல் எனப்படும் எண்ணியல் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜப்பான் நிதி அமைச்சர் சுசுகி சுனிச்சியுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவது தொடர்பிலும் சுசுகி சுனிச்சியுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியதாக அதிபர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சுசுகி சுனிச்சி, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல முக்கிய தரப்பினரை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம்
இதன்படி, அதிபர் செயலகத்தில் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த சுசுகி சுனிச்சி, இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த அவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தை மதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் ஆதரவு
இந்த நிலையில், இலங்கையின் கடன் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் ஜப்பான் வழங்கிய ஆதரவுகளுக்கும் இதன் போது, ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய ஆபிரிக்க குடியரசில் விபத்துக்குள்ளான இலங்கையின் உலங்குவானூர்தி : விசாரணைகளுக்காக நியமிக்கப்பட் குழு
இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான உறவுகளையும், ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும் மேம்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினருக்கிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் வழங்கி வரும் ஆதரவுகளுக்கு அந்த நாட்டு நிதியமைச்சர் சுசுகி சுனிச்சியுடனான சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்துள்ளார்.
ஜப்பான்-இலங்கை உறவு
சிறிலங்கா நபாடாளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவையும் சுசுகி சுனிச்சி இன்று சந்தித்துள்ளார்.
இலங்கையுடன் ஜப்பான் நீண்ட கால உறவுகளை கொண்டிருப்பதாகவும், இந்த உறவுகளை மதிக்கும் வகையில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்குமென இதன் போது சுசுகி சுனிச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் ஜப்பானிய நிதி அமைச்சர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |