பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு! யாழில் இருந்து அநுரவிற்கு பறந்த கடிதம்
கொழும்பு - கொட்டாஞ்சேனையில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை (Jaffna) தலைமையாக கொண்ட தன்னார்வ இளைஞர் அமைப்பான சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு நேற்று (11) குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்த நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மிகவும் இறுக்கமாக பின்பற்ற வேண்டும்.
பல்வேறு இடங்களில் போராட்டம்
கொழும்பில் கடந்த 2025.04.29 தன் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி டில்ஷி அம்ஷிகாவிற்கு ஏற்பட்ட வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் அக் குற்றத்தை மேற்கொண்டவர்கள் மீது உரிய விசாரணை இடம்பெற்று காலதாமதமின்றி தகுந்த தண்டனை வழங்க வலியுறுத்துகின்றோம்.
நீதித்துறை, சட்டத்துறை சார்ந்தவர்கள் பொறுப்புடன் செயற்பட்டு குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கி சிறுவர்கள், பெண்கள் சார்ந்த பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் எமது நாட்டில் வன்முறை, துஷ்பிரயோகங்கள் அற்ற சமூகத்தை உருவாக்க அனைவரும் விழிப்புடன் செயற்படுவோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மாணவியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி, நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

