அம்பாறையில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொது மக்களிடம் கையளிப்பு
அம்பாறை - காரைதீவு இராணுவ முகாம் அமைந்திருந்த காணி 35 வருடங்களின் பின்னர் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த இராணுவ முகாம் அமைந்திருந்த காணி, காரைதீவு பிரதேச தவிசாளரிடம் நேற்று (10.10.2025) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாண இராணுவ அதிகாரிகள் உட்பட உயரதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
அமைச்சரவை தீர்மானம்
வட- கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி, இந்தக் காணியில் நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முகாமை அகற்றி பிரதேச சபையின் பொது நூலக கட்டிடத்தை மீள ஒப்படைக்குமாறு கடந்த காலத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குரல் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் முதற் கட்டமாக இவ் இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளதுடன் இம்மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள மேலும் ஒரு சில இராணுவ முகாம்கள் கட்டம் கட்டமாக அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது காரைதீவில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் கல்முனை முகாம் நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








