ஒரு வருடம் கடந்தும் பெறுபேறுகளை வெளியிடாத பல்கலைக்கழகம் - அம்பலமான தகவல்
களனிப் பல்கலைக்கழகத்தின் கணனி மற்றும் தொழிநுட்ப பீடம் 12 மாதங்களாக பெறுபேறுகளை வெளியிடவில்லை என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை முன்வைக்க அழைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழு அதன் தலைவரும் நீதி அமைச்சருமான அதிபர் சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ச தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியது.
இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு, உயர்கல்வி தொடர்பான தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் முன்வைக்கப்படக்கூடிய முன்மொழிவுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் குழுவை குழுவின் முன் அழைத்திருந்தது.
கல்வி உரிமையாக இருக்க வேண்டுமே தவிர சலுகையாக இருக்கக்கூடாது
களனிப் பல்கலைக்கழக கணனி மற்றும் தொழிநுட்ப பீடம் 12 மாதங்களாகியும் பெறுபேறுகளை வெளியிடவில்லை. கல்வி என்பது உரிமையாக இருக்க வேண்டுமே தவிர சலுகையாக இருக்கக்கூடாது என்று கூறிய பல்கலைகழக மாணவர் பேரவையின் அழைப்பாளர், உயர்கல்வி முறையின் நலிவினால் பல மாணவர்களின் பல்கலைக்கழக கல்வி வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார விஞ்ஞான பீடம் இதுவரை கல்வி நாட்களின் அட்டவணையை சமர்ப்பிக்கவில்லை எனவும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் பரீட்சைகளை நடத்துவதற்கு இன்னும் ஏற்பாடு செய்யவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
துணைவேந்தர்கள்,மாணவர் பிரதிநிதிகளை அழைக்க முடிவு
இதன்படி, உயர்கல்வி அமைச்சு, அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் குழுவின் முன் கூட்டி கலந்துரையாடி எதிர்கால வேலைகள் குறித்து விவாதிக்க குழு முடிவு செய்தது.
குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் கலாநிதி சீதா அரம்பேபொல, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், அனுர பிரியதர்ஷன யாப்பா, எரான் விக்ரமரத்ன, பேராசிரியர் சரித ஹேரத் மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் குழு கூட்டத்தில் பங்குபற்றினர்.
