களுத்துறை விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு
களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (08.10.2026) காலை இடம்பெற்றுள்ளது.
களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று மோட்டார் சைக்கிள்களில் காலி நோக்கி சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தபோது, குறித்த மாணவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சரிந்து விழுந்துள்ளது.
களனி பல்கலைக்கழகம்
இதன்போது எதிர்த்திசையில் பயணித்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் களனி பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் 21 வயதான சிதும் சங்கல்ப என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் மேலும் ஐந்து நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் கொழும்பு நோக்கிலிருந்து காலி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற விதம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்து காரணமாக காலி வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் பின்னர் சீரமைத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |