தொழில்நுட்பத்திற்கும் முதலீட்டுக்காகவும் எமது நிலத்தை சீனாவிற்கு தாரைவார்க்க வேண்டுமா?
கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பள்ளிக்குடாவில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச மீனவர சங்கங்களுடனான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிளிநொச்சி பூநகரி பிரதச செயலகத்திற்குட்பட்ட கௌதாரி முனையில் அமைக்கப்பட்டுள்ள கடல்அட்டை பண்ணை தொடர்பாகவே நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலின் பின் ஊடக சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊடக சந்திப்பில் வட கிழக்கின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையை பொறுத்த வரையில் எமது ஆட்சியாளர்கள் எங்களுடைய வளங்களை பல நாடுகளுக்கு விற்கின்ற அதேவேளை பல நாடுகள் எமது வளங்களை சூரையாடுவதற்கு வழி வகுத்துள்ள வேளையிலே அதிக ஆதிக்கத்தை சீன ஆட்சியாக மாறிக்கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம்.
கடந்த காலங்களில் பார்க்கின்ற வேளை சீனர்களுடைய ஆதிக்கம் வடபகுதியிலும் குடிகொள்கின்றதையும் காணக்கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப்பிரதேச கௌதாரி முனையில் மீனவ சங்கங்களே அறியாமல் அவர்களது அனுமதியும் இல்லாமல் சீன பிரஜைகள் இரண்டு ஏக்கருக்கு உட்பட்ட காணிகளுக்குள்ளே அட்டைக்குஞ்சுகளை வளர்ப்பதற்கான பண்ணைகளை உருவாக்கியிருக்கின்றனர்.
யாருடைய அனுமதி பெற்று இதை இவர்கள் செய்திருக்கிறார்கள் என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.மீனவ சங்கங்களுடனான கலந்துரையாடலின் போதும் எந்தவிதமான அனுமதியும் தம்மிடம் பெறாமல்தான் குறித்த அட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கடந்த காலங்களில் கடல்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார் குறித்த பண்ணை எங்களுக்கு தொழில்நுட்பத்தையும் முதலீடையும் தருவதாக இருக்கிறது ஆகவே அவர்கள் சீன பிரஜைகளா அல்லது வேறு நாட்டு பிரஜைகளா என்பதல்ல, எங்களுக்கு முக்கியம் முதலீடும் தொழில்நுட்பமும் என்று கூறியிருந்தார்.
அவ்வாறானால் தொழில்நுட்பத்திற்கும்,முதலீட்டுக்காகவும் எங்களுடைய நிலத்தை மற்றவருக்கு தாரைவார்த்து அல்லது விற்பது சரியான விடயமா என்று நாங்கள் பார்க்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையில் எங்களுடைய வளங்களை மற்றவர்களுக்கு கொடுக்கின்ற முயற்சிகளில் முயல்கின்றதா என்ற கேள்வி எங்களுக்குள்ளே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் வீ.சுப்பிரமணியம் , தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க வட கிழக்கின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன்,பூநகரி கடற்றொழிலாளர் சமாச தலைவர் யோசப் பிரான்சித் மற்றும் மீனவ சங்கங்களின் தலைவர்கள் தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

