மண்சரிவு அபாயம் :இடம்மாற்றப்படும் தமிழ் பாடசாலை
மண்சரிவு அபாயம் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த கொத்மலை - தவலந்தென்ன ரம்பொட வெவன்டன் தமிழ் வித்தியாலயம், தவலந்தென்னவில் உள்ள தொண்டமான் கலாசார மையத்தில் இயங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆரச்சி இதனை தெரிவித்துள்ளார்.
வெவன்டன் தமிழ்க் கல்லூரிக்கு அருகில் பாடசாலைக்கும், ரம்பொட பகுதிக்கும் செல்லும் சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
அடுத்த சில நாட்களில் கல்வி நடவடிக்கை
தொண்டமான் கலாசார மையத்தில் போதுமான இடம் இருப்பதால், காலியான கட்டிடங்களில் வகுப்பறைகளை அமைத்து, அடுத்த சில நாட்களில் அங்கு கல்வி நடவடிக்கைகளை நடத்துவதற்குத் தேவையான ஆரம்பப் பணிகள் கொத்மலை வலய அலுவலக அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆரச்சி தெரிவித்தார்.

இந்தப் பாடசாலையில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை 143 மாணவர்களும், 13 ஆசிரியர்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


