பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்பு : கலந்துரையாடலில் குழப்பம்
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அபிவிருத்தித் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்ட காணி உரிமையாளர்கள்
வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி மேற்கு, மயிலிட்டி வடக்கு, தென்மயிலை மற்றும் குரும்பசிட்டி ஆகிய நான்கு கிராம சேவகர் பிரிவுகளில், 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காக வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்ட 267 ஏக்கர் காணிகளின் 436 காணி உரிமையாளர்கள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, வலி வடக்கில் இன்னும் காணிகளை மீளப் பெறாத காணி உரிமையாளர்களும் பிரதேச செயலகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் கூட்ட மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படாத நிலையில், மாவட்ட அரசாங்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கூட்டம் முடிந்ததும் உங்களோடு கலந்துரையாடுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார் ஆனால் அந்த சந்திப்பு இடம் பெறவில்லை மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
1986ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு 2022ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, இழப்பீடு வழங்குவதற்கான சத்தியக்கடதாசியில் கையொப்பமிடுமாறு காணி உரிமையாளர்களிடம் கோரப்பட்டது.
சத்தியக்கடதாசியால் வந்த குழப்பம்
எனினும், ஒவ்வொரு காணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு விபரங்கள் வழங்கப்படாத நிலையில் சத்தியக்கடதாசியில் கையொப்பமிட முடியாது என காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சத்தியக்கடதாசியின் உள்ளடக்கம் தெளிவற்றதாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியதால் கூட்டத்தில் பரபரப்பும் குழப்பநிலையும் ஏற்பட்டது.

குழப்பநிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கூட்ட மண்டபத்திற்குள் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் , காணி உரிமையாளர்கள் தரப்பில் ஏழு பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு, அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக சத்தியக்கடதாசியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை காணி மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர் மீண்டும் காணி உரிமையாளர்களை அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்திலிருந்து வெளியேறிய காணி உரிமையாளர்கள்
எனினும், சில காணி உரிமையாளர்கள் இழப்பீடு பெறுவதில் இணக்கம் தெரிவிக்காமல் கூட்டத்திலிருந்து வெளியேறினர். அவர்கள், தங்களுக்கு இழப்பீடு மட்டும் வழங்காமல், காணிகளை மீள வழங்கி மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதன் பின்னரே விமான நிலையத் தேவைக்காக காணிகளை வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், சத்தியக்கடதாசியில் தெளிவின்மை காணப்பட்டதே மக்களிடையே நம்பிக்கையின்மையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


