வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வது குறித்து அமைச்சரவை அமைச்சர்களின் கருத்தினை அறியுமாறு சட்டமா அதிபர் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் காணிகளை அரசுக்கு பெற்றுக் கொள்வதற்காக வெளியிடப்பட்ட 2430 ஆம் இலக்க வர்த்தமானி அறிவிப்பை இரத்துசெய்யும் தீர்மானம் அமைச்சரவை அளவில் ஏற்கப்பட்டுள்ள நிலையிலும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
வடக்கு மக்கள் எதிர்ப்பு
கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியான அந்த வர்த்தமானி அறிவிப்பில், 5,940 ஏக்கர் காணிகள் மூன்று மாத காலத்தில் உரிமை கோரப்படாவிட்டால், அரசின் சொத்துகளாக பரிவர்த்தனை செய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இது வடக்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இதேவேளை, வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செயப்படாதது குறித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நீதியமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலகத்திடம் விளக்கம் கோரி தொடர்பு கொண்டிருந்தார்.
சட்டமா அதிபர் பரிந்துரை
இதையடுத்து, காணி அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி கடந்த மே 26ஆம் திகதி கடிதம் அனுப்பியிருந்தார்.

அதன் பதிலாக, அமைச்சரவை உறுப்பினர்களின் கருத்துகளை பெறுவதற்காக சட்டமா அதிபர் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் உதவிச் செயலாளர் மிஹிரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப்பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது அமைச்சர் லால் காந்த முன்னர் வாக்குறுதியளித்தவாறு, சமீபத்திய நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        