உறுமய காணி உரிமை : பதிவுகளுக்காக அவசரத் தொலைபேசி இலக்கம் அறிமுகம்
“உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் படி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசரத் தொலைபேசி இலக்கத்தத்திற்கு தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடர்பு கொண்டு அதிபர் அலுவலகம், உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பதிவுசெய்து கொள்ளலாம்,
அதன்படி 1908 என்ற அவசரத் தொலைபேசி இலக்கம் மற்றும் 0114 354600/ 0114 354601 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தமது கோரிக்கைகளைப் பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் விண்ணப்பப் படிவம்
தவிரவும், www.tinyurl.com/urumaya இணையத்தளத்தின் மூலம் டிஜிட்டல் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்தும் இதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1935 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க நில மேம்பாட்டுக் கட்டளைச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதிப் பத்திரங்கள் / கொடுப்பனவுப் பத்திரங்கள் உள்ள அரசாங்கக் காணிகளை நிபந்தனைகளின்றி முழுமையான உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் 2024 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு தனித்துவமான முன்மொழிவாகவும் இது விளங்குகின்றது.
இந்த “உறுமய” நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக முழுமையான உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களைப் பெறுவதன் மூலம், குறித்த காணிக்கு புதிய பெறுமதி கிடைப்பதுடன், அவர்களின் உரிமையைப் பாதுகாத்து அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |