கேகாலையில் மண்மேடு சரிவில் சிக்கி மூவர் பலி - வெளியாகியது மேலதிக விபரம் (படங்கள் இணைப்பு)
கேகாலை - ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட தகவல்களுக்கு அமைய 4 பேர் காணாமல் போயுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி (Pradeep Kodipilly) தெரிவித்திருந்தார்.
குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த சிறிலங்கா இராணுவத்தினர் அனர்த்தத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது தந்தை காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவ்வனர்த்தத்தின் போது தாய் மற்றும் அவரது 8 மற்றும் 14 வயதுடைய இரு மகள்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடுமுழுவதும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் அனர்த்தத்தில் சிக்கியவர்களை மீட்குப் பணிகளுக்காக முப்படையினர் எப்போதும் தயாராகவே இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





