இந்தியாவில் 326 பேரின் உயிருக்கு வைக்கப்பட்ட உலை : விமானியின் சாதுர்யத்தால் தவிர்க்கப்பட்ட பேரிழப்பு
துபாயிலிருந்து (dubai) 326 பயணிகளுடன் சென்னைக்கு வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் விமானி , விமானத்தை தனது சாதுர்யத்தால் பத்திரமாக தரையிறக்கியதால் அதில் பயணம் செய்த 326 பேரின் உயிரும் பாதுகாக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திடீரென விமானத்தை நோக்கி பாய்ச்சப்பட்ட லேசர் ஒளி
துபாயில் இருந்து 326 பயணிகளுடன் எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) வந்தது.
சிறிது நேரத்தில் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும் என்பதால், பறக்கும் உயரத்தை மெல்ல மெல்ல குறைத்தது. இதனால் விமானம் தாழ்வாக பறந்தது.
இந்த நிலையில் பரங்கிமலையில் இருந்து விமானத்தின் மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது.இதனால் சில வினாடிகள் விமானி நிலை குலைந்துபோனார். ஆனாலும் அடுத்த சில வினாடிகளில் சுதாகரித்துக் கொண்டு, தாழ்வாக பறந்து கொண்டிருந்த விமானத்தை மீண்டும் உயரத்துக்கு கொண்டு சென்றார்.
பத்திரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
இதையடுத்து விமானி, சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
விமானி அளித்த தகவலின் பேரில், லேசர் ஒளி பாய்ந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
