ஐ.நா. அவையில் புறக்கணிக்கப்பட்ட நெதன்யாகு: உலகத் தலைவர்கள் வெளிநடப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) உரையாற்றுவதை புறக்கணித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஐ.நா. அமைப்பின் (United Nations) இன்றைய (26) பொது அவைக் கூட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நியூயார்க் (New York) நகரில் நடைபெறும் ஐ.நா. அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் காஸாவில் (Gaza) உள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளை இனப்படுகொலை எனக் குறிப்பிட்டும் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய வேண்டுமெனவும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தங்களது உரையில் வலியுறுத்தி வருகின்றனர்.
பல்வேறு நாடு
இந்த நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு இன்று (26) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இதன்போது, அவர் தனது உரையை ஆரம்பித்த உடன் அங்கிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவையை விட்டு வெளியேறியுள்ளனர்.
சில பிரதிநிதிகள்
இருப்பினும், அவையில் மீதமிருந்த சில பிரதிநிதிகளின் முன்னிலையில் பெஞ்சமின் நெதன்யாகு தனது உரையை ஆற்றினார்.
இதில், சுமார் 45 நிமிடங்கள் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் படைகளுக்கு எதிரான இஸ்ரேலின் வெற்றிகளைக் குறித்து அவர் உரையாற்றியுள்ளார்.
இஸ்ரேலின் இனப்படுகொலை
இந்தநிலையில், பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையில் பங்கெடுக்க விரும்பவில்லை என்பதாலும் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் அவர்கள் வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, பெஞ்சமின் நெதன்யாகு உரையின் போது ஒன்றாக வெளியேற வேண்டும் என அவர்கள் அனைவரும் முன்கூட்டியே திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக ஐ.நா.வின் இந்தப் பொது அவைக் கூட்டத்தில் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
