"18% மின் கட்டண அதிகரிப்பே போதுமானது" மின்சார சபை அறிவிப்பு
மின்சார சபையினால் கணிக்கப்பட்டுள்ள 32 பில்லியன் ரூபா நட்டத்தை ஈடுகட்டுவதற்கு முன்னர் 22% கட்டண அதிகரிப்பு தேவைப்பட்டது, ஆனால் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு 18% மின் கட்டண அதிகரிப்பே போதுமானது என மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜூலை மாதம் மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டு, அடுத்த திருத்தம் எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், இம்மாதத்திலிருந்து மேலும் கட்டண அதிகரிப்பு தேவையென இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தது.
அந்த வகையில், மின்கட்டணத்தை 22 சதவீதம் அல்லது ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 8 ரூபாய் உயர்த்த அனுமதி கோரியுள்ளனர்.
மின்சார சபையின் நட்டம்
எவ்வாறாயினும், கோரப்பட்ட கட்டண உயர்வை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, திருத்தப்பட்ட அறிக்கையை இன்று (18) சமர்ப்பிக்குமாறு அறிவித்தது.

எதிர்பார்த்த சதவீதத்தினால் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால், மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட முடியாது என இலங்கை மின்சார சபை மீண்டும் அறிவித்துள்ளது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற உத்தேச மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆலோசனை நிகழ்ச்சியில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.