யாழில் கட்டணமானி பொருத்தாத 800 முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
யாழ்ப்பாணத்தில் கட்டணமானி பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாவட்ட செயலகத்தில்இடம்பெற்ற சந்திப்பின் போதே காவல்துறையினர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
'தனியார் போக்குவரத்து சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் தற்போது தனது சேவையை வழங்க ஆரம்பித்துள்ளது, அதனூடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் குறைந்தளவு , கட்டணங்களையே வசூலிக்கின்றன' என்று முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இதன்போது கருத்துத் தெரிவித்தனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதன் காரணமாக நீண்ட காலமாக சேவையில் ஈடுபடும் அவர்களது வாழ்வாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைய பெரும் தொகை பணத்தினை செலவிட்டு கட்டணமானியினை பொருத்தியிருந்தும் கூட அந்நிறுவனம் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளே அதிகமாக சேவைகளில் ஈடுபடுகின்றன என்றும் இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த யாழ் மாவட்ட செயலாளர்,
"சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் கட்டாயம் கட்டணமானியை பொருத்தியிருக்க வேண்டும், அதனைத் தான் நாங்கள் யாழிலும் நடைமுறைப்படுத்தியுள்ளோம்" என்று கூறினார்.
உரிய அனுமதி
அதேவேளை உரிய அனுமதிகளைப் பெற்று போக்குவரத்து சேவையில் ஈடுபடும் எந்த முச்சக்கர வண்டிகளையும் சேவையை வழங்கும் எந்தவொரு தனியார் நிறுவனத்தினையும் தடுக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கட்டணமானி பொருத்தி சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொதுமக்களால் தினமும் முறைப்பாடுகள் வழங்கப்படுகின்றன.
ஆனால் தனியார் நிறுவனம் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் இதுவரையில் எந்த முறைப்பாடும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், மாவட்ட செயலர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.