சினோபெக்கின் எரிபொருள் விற்பனை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!
குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் சீன பெற்றோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனத்தின் (Sinopec) சில்லறை எரிபொருள் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (25) இந்த செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (26) அறிவித்திருந்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கென்று (CPC) ஒதுக்கப்பட்டிருக்கும் 150 எரிபொருள் நிலையங்களின் மூலமாக சினோபெக்கின் செயற்பாடுகள் நடைபெறவுள்ளதாக அமைச்சர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எரிபொருளின் தரம்
எதிர்வரும் காலங்களில், 50 புதிய எரிபொருள் நிலையங்களை சினோபெக் நிறுவனத்தால் நிறுவப்படவுள்ளதாகவும் அமைச்சர் விஜேசேகர மேலும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
நேற்றைய தினம் (25) இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வானது, இலங்கையின் வரலாற்று ரீதியான கூட்டாண்மை மற்றும் முதலீட்டைக் குறிக்கிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த கூட்டாண்மை ரீதியில் நாட்டுக்கு எரிபொருள் கிடைப்பது, எரிபொருளின் தரம் மற்றும் எரிபொருளின் மலிவு விலையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இதன் மூலம் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.