இலங்கை வரும் ஷி யான் 6 கப்பல் விவகாரம்: தனது நிலைப்பாட்டை வெளியிட்ட அமெரிக்கா
இலங்கைக்கான விஜயம்
சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இன் இலங்கைக்கான விஜயம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரின் நிமித்தம் அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியை, அமெரிக்காவின் துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தின் மத்தியில் காணப்படுகின்ற நாடு இலங்கை, இது ஒரு நடுநிலையான நாடு என்பதனால் வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் இலங்கையில் எந்தவொரு நடவடிக்கையை மேற்கொள்வதாக இருந்தாலும் அதற்கென்ற ஒரு நிலையான செயற்பாட்டு நடைமுறையை வகுத்து அதன்படி இலங்கை செயற்பட்டு வருகிறது என்று அமைச்சர், விக்டோரியா நுலாண்ட்டிற்கு பதிலளித்துள்ளார்.
சம உரிமை
இது பொதுவான நடைமுறை என்பதால், அனைத்து நாடுகளுக்கும் சமமான உரிமை வழங்கப்படும், ஓரிரு நாடுகளுக்கு தடை விதிப்பது விதிமுறைகளை மீறுவதாக ஆகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதனால் சீனாவை மட்டும் இந்த செயல்முறையிலிருந்து விலக்க முடியாது என்று அமைச்சர் விக்டோரியா நுலாண்டிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக, அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிநாட்டு கப்பல்களுக்காக நிலையான செயற்பாட்டு நடைமுறையை இலங்கை கொண்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்தியாவிற்கு அச்சுறுத்தல்
இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் மத்தியில் சீன ஆய்வுக் கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் (NARA) இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்த நிலையில் குறித்த கப்பல் வருகையானது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என சில ஆர்வலர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இலங்கை நோக்கிச் பயணத்தை மேற்கொண்ட இந்த கப்பல், பின்னர் வங்காள விரிகுடாவை நோக்கித் திரும்பி, இந்தியாவின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு அருகில் அமைந்துள்ள நிக்கோபார் தீவுகளை நோக்கி மிக மெதுவாகச் செல்வதாக இதற்கு முன்னர் தகவல்கள் வெளியாகின
எனினும் இந்த கப்பலின் தற்போதைய அமைவிடம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.