இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் : பெப்ரல் அமைப்பு வலியுறுத்தல்!
இலங்கை மக்களின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு பெப்ரல் அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எட்டு மாதங்களாக ஒத்திவைக்கப்பட்டமை மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளாக்கியுள்ளதாக பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கை
இந்த நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவால் கோரப்பட்ட 10 பில்லியன் ரூபாவில் ஏற்கனவே ஒரு பில்லியன் ரூபாய் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் செலவிடப்பட்ட ஒரு பில்லியன் ரூபாவுக்கு பொறுப்புகூறுவது யார் என பெப்ரல் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இவ்வாறான சூழ்நிலையில், பணத்தை வீணடிப்பது நியாயமற்ற செயல் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்திடமான கோரிக்கை
இந்த நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேவையான பணத்தை, சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |