லொஹான் ரத்வத்தவிற்கு விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானம்
புதிய இணைப்பு
சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருப்பதால் நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திடீர் சுகவீனம் காரணமாக லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிரிஹான (Mirihana) பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நேற்று முன்தினம் (31) கைது செய்யப்பட்டார்.
கண்டியில் வைத்து கைது
கண்டி (Kandy) – கட்டுகஸ்தொட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், கொழும்புக்கு (Colombo) அழைத்து வரப்பட்டு, நுகேகொடை – கங்கொடவில மேலதிக நீதவான் சஞ்சய லக்மால் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, லொஹான் ரத்வத்தவின் மனைவியைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதற்காக காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |