தொடரும் சீரற்ற காலநிலை - வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவெடுக்கும் சாத்தியம்
இந்த வருடத்திற்கான இரண்டாவது இடைப்பருவம் இன்று(14) ஆரம்பித்திருக்கின்றது. இவ்வாண்டு இரண்டாவது இடைப்பருவம் குறுகிய காலப் பகுதியைக் கொண்டதாகவே அமையும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட பதிவொன்றில் இதனைக் கூறியுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
காலநிலைப் பருவங்கள் மீளாய்வு
“ஆனால் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காலநிலைப் பருவங்கள் பற்றி மீளாய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது.
இரண்டாவது இடைப்பருவம் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக இன்று முதல்(14.10.2022) நாளை மறுதினம் (16.10.2022) வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வடக்கு மாகாண விவசாயிகள் அடுத்துவரும் சில தினங்கள் கழித்து தங்களது பெரும்போக விதைப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
அதே சமயம் எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது தொடர்பாக மேலதிக விபரங்கள் பின்னர் இற்றைப்படுத்தப்படும்” என்றுள்ளது.
