காணியொன்றிலிருந்து வெடிபொருட்களுடன் விடுதலைப் புலிகளின் கொடி மீட்பு
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பகுதியில் காணியொன்றிலிருந்து வெடிப்பொருட்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த காணியிலிருந்து R.P.G. தோட்டா, மோட்டார் தோட்டா மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணி உரிமையாளரால் பயிர்ச்செய்கைக்காக காணியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினர் சந்தேகம்
இவ்விடயம் தொடர்பில் காணி உரிமையாளரால் புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த ஆயுதங்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு யுத்தத்தின் போது இந்த வெடிப் பொருட்கள் மற்றும் கொடி, விடுதலைப் புலிகள் அமைப்பினரால் குறித்த காணியில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவல்துறை விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவால் இந்த வெடிபொருட்கள் செயலிழக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

