“ஆயுதங்கள் அதிகாரச் சின்னமல்ல, அரசியல் இலக்கை அடையத் துணைசெய்கின்ற கருவிகளே" வே.பாலக்குமார்
இந்திய அமைதிகாக்கும் படைகள் தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த போது, ஈழத்தில் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த ஒவ்வொரு தமிழ் அமைப்புக்களும் எப்படியான நிலைப்பாடுகளை எடுத்திருந்தன என்பது பற்றி கடந்த சில வாரங்களாக இத் தொடரில் பார்த்து வருகின்றோம்.
விடுதலைப் புலிகள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டீ.எல்.எப். போன்ற அமைப்புக்கள் முற்றுமுழுதாகவே இந்தியப்படைகளுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள்.
புளொட் அமைப்பினரோ சிறிலங்கா அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, சிறிலங்காப் படைகளுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்திருந்தார்கள்.
இந்தக் காலகட்டத்தில், ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பான ஈரோஸ் அமைப்பு எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருந்தது என்பது பற்றியும் ஆராய்வது இச்சந்தர்ப்பத்தில் அவசியமாகின்றது.
இந்து நாளிதழுக்கு பாலக்குமார் வழங்கிய செவ்வி
இந்திய அமைதிகாக்கும் படை தொடர்பாகவும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாகவும், ஷஈரோஸ் அமைப்பு கொண்டிருந்த நிலைப்பாட்டை, அந்த அமைப்பின் புரட்சிகர நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வி.பாலகுமார் , இந்தியாவின் பிரபல இந்து ஆங்கில நாளிதழுக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்றில், தெளிவுபடுத்தியிருந்தார்.
1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியான அந்தப் பத்திரிகைப் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பாலக்குமாரின் பதில்களும்:
கேள்வி: ஆயுத ஒப்படைப்பு பற்றி
பதில்: முதலில் நான் ‘இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்குச் சென்றதை பாராட்டியாகவேண்டும்.
எங்கள் பகுதிகளில் அமைதியை நிலைநிறுத்த இந்தியப்படைக்கு உதவி புரியுமாறு எங்கள் தோழர்களுக்கு நாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம்.
அமைதியை நோக்கிய இந்தியப்படையின் முயற்சிகளுக்கு எங்கள் தோழர்கள் ஒருபோதும் தடங்கலாக இருக்கமாட்டார்கள் என்பதற்கு எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியும்.
இந்திய அமைதிகாக்கும் படையினரிடம் எங்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்திய அரசு எமது கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ளவேண்டும்.
கேள்வி: என்ன கஷ்டங்கள்?
பதில்: கடந்த பத்து வருடங்களாகப் போராடிவரும் எமது தோழர்களை திடீரென்று ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு ஒப்புக்கொள்ளச் செய்வது அவ்வளவு சுலபமான வேலையல்ல.
எங்கள் தோழர்கள் தங்கள் மனங்களிலும் ஆயுதங்களைத் தரித்திருக்கின்றார்கள்.
இந்தப் போராட்ட உணர்வே எங்கள் தோழர்களுக்கும், மக்களுக்கும் ஒரு பாதுகாப்பு கேடயமாக விளங்குகின்றது.
அதனால்தான் சாதகமான ஒரு சூழல் உருவாகாத இந்த நேரத்தில் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு எமது தோழர்களின் இசைவைப் பெறுவது எழிதான, சுலபமான வேலையல்ல என்று கூறினேன்.
எதுவாயினும் சரி, நான் இங்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நாம் ஆயுதங்களின் பின்னால் பித்துப்பிடித்துத் திரியவில்லை. ஆயுதங்கள் என்பதற்காகவே அவற்றை நாம் ஏந்தியிருக்கவும் இல்லை.
எங்களின் சக்தி ஆயுதங்களுக்குள் மாத்திரமே அடங்கியிருக்கவில்லை.
அதாவது எங்களுக்கு ஆயுதங்கள் வெறும் அதிகாரச் சின்னமல்ல. உண்மையைச் சொல்வதானால், எங்களின் மகத்தான அரசியல் இலக்கை அடையத் துணைசெய்கின்ற கருவிகளே ஆயுதங்கள்.
கேள்வி: இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை சிறிலங்காப் நாடாளுமன்றம் அங்கீகரிக்கவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
அதனால் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு உரிய கால அவகாசம் தேவை. ஒப்பந்தத்தை சிறிலங்கா நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதற்கான நம்பிக்கையை எங்கள் தோழர்களிடம் ஏற்படுத்திய பின்னரே, ஆயுதங்களைக் கைவிட இயலும்.
ஆனால், எது எப்படியாயினும், இந்திய அமைதிகாக்கும் படை சென்றிருக்கும் இச்சூழ்நிலை பற்றி எங்கள் தோழர்களோடு விவாதித்து வருகின்றோம். விரைவில் ஒரு முடிவைக் காண்போம் என்று நம்புகின்றோம்.
கேள்வி: இந்த ஒப்பந்தம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றதா அல்லது வேதனையைத் தருகின்றதா?
பதில்: நாங்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கவில்லை. அதாவது இந்த ஒப்பந்தம் எங்களுக்கு மனநிறைவைத் தருவதாக இல்லை. ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமூச்சாக எதிர்க்கவும் இல்லை.
எனினும் இந்த ஒப்பந்தம் வெளிநாட்டுச் சக்திகளுக்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இழிந்த கைக்கூலிகளுக்கு, குறிப்பாக மனிதாபிமானத்தின் முதல் எதிரியும், எண்ணற்ற பலஸ்தீனப் போராளிகளைப் படுகொலை செய்ததுமான இஸ்ரேல் மொசாட் இற்கு, இலங்கையை விட்டு வெளியேற வழி வகுத்திருக்கின்றது.
மேலும் இந்த ஒப்பந்தம், இந்துமகா சமுத்திரத்தின் மீதான அமெரிக்காவின் நாசகாரச் செயல்முறைகளை தடுத்துள்ளது. இத்திட்டங்களை நிறைவேற்றுவதால் ஒப்பந்தத்தை இந்த நோக்கில் நாங்கள் வரவேற்கவே செய்கின்றோம்.
அதேவேளை, நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏன் முழுமனதுடன் வரவேற்கவில்லை என்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன.
1975 இல் நிறுவப்பட்ட ஈழப் புரச்சிகர அமைப்பு (ஈரோஸ்) மலையகத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் தனது அடிப்படைக் கொள்கைத் திட்டமாகக் கொண்டிருக்கின்றது.
தமிழ் தேசிய இனத்தில் மலையக மக்களே ஜீவனான, இன்றியமையாத அங்கமாக விளங்குகின்றார்கள்.
தமிழ் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு தீர்வும், அல்லது எந்தவொரு ஒப்பந்தமும் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்றே நாங்கள் கருதுகின்றோம்.
ஆனால் துரதிஷ்டவசமாக இந்த ஒப்பந்தம் அவ்வாறு இல்லை. ஆதலால் அரசியல் ரீதியிலான பலவகைப் போராட்டங்களில் தொடர்ந்து நாம் ஈடுபடுவதாக கூறியிருக்கின்றோம்.
சிறிலங்கா அரசு எங்களைப் போராடவிடாமல் தடுத்தால் நிச்சயம் நாங்கள் வேறு பல போராட்ட வடிவங்களை கைக்கொள்ளுவோம். மேலும் கிழக்கு மாகாணத்தில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்போவதாய்க் கூறியிருப்பதை நாங்கள் எதிர்க்கவே வேண்டியிருக்கின்றது.
இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு முறையை எண்ணி நாங்கள் வருந்தவில்லை. மாறாக கடந்த 40 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளதை எண்ணியே பெரிதும் வருந்துகின்றோம்.
1986 டிசம்பர் 19இல் அறிவிக்கப்பட்ட புதுத் தீர்மானங்கள் விவாதத்திற்குரிய பல கேள்விகளை எழுப்பின. அந்தத் தீர்மானத்தின் ஒரு கூறு, கிழக்கு மாகாணத்தில் இருந்து அம்பாறை தேர்தல் தொகுதியை விலக்கி வைத்ததாய் அறிவித்தது.
ஆனால் இன்றோ அவர்கள் அம்பாறையை கிழக்கு மாகாணத்துடன் இணைக்கப் போகின்றார்களாம்.
இந்த நேரத்தில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு முறை குறித்து எங்களது கவலை, அவர்கள் சிங்களப் பெரும்பாண்மையினரைக் கொண்டு இந்த மாகாணங்களின் கூட்டிணைவிற்கு எதிராக வாக்களிக்கச் செய்துவிடுவார்கள் என்பதே.
கிழக்கு மாகாணத்தில் இனவாத சிறிலங்கா அரசின் உதவியோடு, நிகழ்ந்த சிங்களக் குடியேற்றத்தை இந்தக் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முறை, சட்டப் பொருத்தமுடைய செய்கையாக மாற்றிவிடுமோ என்று அஞ்சுகின்றோம்.
ஆகவே இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.
இந்தியாவிற்கு முடிந்த அளவு நாங்கள் துணை புரிய முயற்சிப்போம். இவ்வாறு, ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலக்குமார், இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.
ஈரோஸ் நடாத்திய ஹர்த்தால்
இலங்கை இந்திய ஒப்பந்த விடயத்தில் ஈரோஸ் எடுத்திருந்த நிலைப்பாடானது, புலிகளுக்கு சார்பான ஒரு நிலைப்பாடாகவே சிறிலங்கா அரசிற்கு தோன்றியது.
அத்தோடு, மலையகத் தமிழர்கள் தொடர்பாக ஈரோஸ் கொண்டிருந்த நிலைப்பாடும், சிறிலங்காவில் மத்திய மாகாணத்தில் மற்றொரு பிரச்சனையை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தையும் சிங்கள அரசுக்கு ஏற்படுத்தியிருந்தது.
இதனால் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு தனது படையினரை ஏவிவிட்டது. ஒரு நாள் திடீரென்று சில ‘ஈரோஸ் உறுப்பினர்கள் காணாமல் போயிருந்தார்கள்.
சிறிலங்காப் படைகளே தமது அமைப்பின் உறுப்பினரைக் கடத்திக் கொலை செய்துவிட்டதாக ஈரோஸ் குற்றம் சுமத்தியது.
இந்தச் சம்பவத்தை கண்டித்து 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி, பூரண ஹர்த்தால் ஒன்றிற்கான அழைப்பையும் அந்த அமைப்பு விடுத்திருந்தது.
இந்தச் சம்பவம் பற்றி, ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் அவர்கள், சென்னையில் இருந்து ஈழ நண்பர் கழகத்தினால் வெளியிடப்பட்ட நட்புறவுப் பாலம் சஞ்சிகைக்கு வழங்கியிருந்த செவ்வியில், ஷஷபோர் நிறுத்தம் நடைமுறையில் இருந்துவரும் வேளையிலும் சிறிலங்காப் படைகள் எமது தோழர்கள் மீது தாக்குதல் நடாத்திவருவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
இதுபோன்ற செய்கைகளின் மூலம், இன்னமும் ஆயுதம் தாங்கிக்கொண்டு முகாமிற்கு வெளியே திரிந்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் திட்டமிட்டு சீர்குலைக்க சிறிலங்கா இராணுவத்தின் தீய சக்திகள் முயற்சி செய்கின்றன.
சிறிலங்கா இராணுவத்தின் கொடூரத் தன்மை மாறாதிருப்பதும் இச்சம்பவத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
கொடூரமாகக் கொல்லப்பட்ட எமது போராளிகளின் உடல்களை அழித்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறும் சிறிலங்கா அரசின் நாடகம், அதன் சுயரூபத்தை அம்பலப்படுத்துவதாகவே உள்ளது.
சிறிலங்கா இராணுவம் முற்றாக எமது பகுதிகளில் இருந்து வெளியேறாதவரை எமக்குப் பூரண அமைதி கிட்டாது என்பதை இச்சம்பவம் துலாம்பரமாக வெளிப்படுத்துகின்றது என்று பாலக்குமார் தெரிவித்திருந்தார்.