தமிழீழ விடுதப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை வைத்து அரசியல் - சாணக்கியன் காட்டம்!
"தமிழீழ விடுதப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை வைத்துக்கொண்டு பலர் அரசியல் செய்வதற்கு தற்போது முயற்சி எடுக்கின்றனர்.
அவரினுடைய பெயரை வைத்து தவறான பல கருத்துக்கள் பகிரப்பட்டு கொண்டு வருகின்றது, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு இருந்தால் அவர் நேரடியாக வந்து மக்களுக்கு தெரிவிப்பார்"
இவ்வாறு, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
"சமகாலத்திலே இலங்கையில நடக்கின்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது பிக்குமார்கள் பாராளுமன்றத்திற்கு முன்பாக வந்து நின்று பதிமூன்றாவது திருத்தச் சட்டத்தை எரித்துவிட்டு மறுநாள் காலையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றார்கள்.
நெடுமாறன் ஊடாக இந்த செய்தி வருவதாக இருந்தால், ஒரு சந்தேகம் இருக்கின்றது, நான் நெடுமாறன் அவர்களை பிழையாக சொல்லவில்லை, ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் விடயங்கள் வருவதென்றால் ஒரு அதிரடியாகத்தான் இடம் பெறும் என்பதைத்தான் நான் சொல்ல விரும்புகின்றேன்.

தேர்தல் நடக்கும் என்கின்ற எதிர்பார்ப்புடன் நாங்கள் எங்களுடைய தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம், தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பது தொடர்பாக நாங்கள் அச்சப்படத் தேவையில்லை, தேர்தல் ஆணைக்குழு அதற்கான திகதியை அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் காவல்துறையினருக்கும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் ஜனநாயகம் இருந்தால் கட்டாயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் தேர்தல் நடத்தாவிட்டால் இந்த அரசாங்கம் பாரிய எதிர்ப்புக்கு முகம் கொடுக்கும், தேர்தலை பிற்போட பிற்போட ஆட்சியில் இருக்கிறவர்களின் செல்வாக்கு குறையுமே ஒழிய அவர்களுடைய செல்வாக்கு ஒருபோதும் அதிகரிக்காது.
நான் இந்த நாட்டின் தலைவராக இருந்தால், அல்லது நான் ரணில் விக்ரமசிங்கவாக இருந்தால், நான் இந்த தேர்தலை உடனடியாக நடத்துவேன், இவ்வாறான ஆலோசனையை தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு என்னால் சொல்ல முடியும்." என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.