சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனம் கைப்பற்றப்பட்டது
கொழும்பைச் சேர்ந்த வைத்தியரினால் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட எஸ்யூவி (SUV) சொகுசு வாகனமானது குருநாகல் வலன பகுதி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
உரிய முறையில் வரி செலுத்தாமல் இந்த சொகுசு வாகனமானது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், இந்த வாகனமானது சுமார் 80 மில்லியனிற்கும் அதிகமான மதிப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்யும் நோக்கில் குருநாகலில் உள்ள ஒரு வர்த்தகரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே குறித்த எஸ்யூவி வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள்
2020 ஆம் ஆண்டு ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்ட எஸ்யூவி வாகனத்தை கொழும்பில் உள்ள பிரபல வைத்தியர் ஒருவர் இறக்குமதி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், வாகனத்தை இறக்குமதி செய்த வைத்தியர் இலங்கை சுங்கப் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் போலி ஆவணங்களை தயாரித்து இந்த வாகனத்தை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார் என்றும்,
பின்னர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்த்தில் பணிபுரியும் ஒருவரின் உதவியுடன் வேறு சிலரின் பெயர்களில் இந்த வாகனத்தினை போலியாக பதிவு செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போதே குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் பலர் தொடர்புபட்டிருப்பதால் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.