பிரதமர் மஹிந்தவிடம் விசாரணை நடத்த வேண்டும்! ஜே.வி.பி கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முதலில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்த வேண்டுமெனவும் அதன் பின்னர் ஜே.வி.பியிடம் விசாரணை நடாத்த முடியும் எனவும் ஜே.வி.பியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட வேண்டுமென பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் கூறியிருந்தார்.
இந்தக் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் பிமல் ரத்நாயக்க பேசியதாவது, சஹரான்களுக்கு யார் சம்பளம் வழங்கியது, சஹரான் உள்ளிட்ட 21 பேருக்கு எவ்வாறு சம்பளம் வழங்கப்பட்டது? இந்த விடயங்கள் குறித்து மஹிந்தவிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டு வாருங்கள். ஏனெனில் சஹரானுக்கு சம்பளம் வழங்கியதாக மஹிந்த பொதுவெளியில் ஒப்புக்கொண்டார்.
இப்ராஹிம் ஹாஜியார் என்ற வர்த்தகருக்கு மஹிந்த அரசாங்கம் விருது வழங்கியது. இப்ராஹிமிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்க முன்னதாகவே மஹிந்த அரசாங்கம் விருதுகளை வழங்கியுள்ளது.
தற்போதைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் இப்ராஹிம் ஹாஜியாருக்கு கௌரவ பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கியுள்ளனர்.
அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தும் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட முன்னதாக நிகழ்ந்தவை என்றார்.