நாட்டை வழி நடத்த தவறியவர்கள் : மேதின கூட்டத்தில் சஜித், அனுரவை கடுமையாக விமர்சித்த மகிந்த
அரகலிய போராட்டத்தை அடுத்து நாடு நெருக்கடியை எதிர்நோக்கிய சமயம் நாட்டை வழி நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்காவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அவர்கள் இருவரும் தமது அரசியல் எதிர்காலம் குறித்து பயந்து மறுத்ததாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை வழி நடத்த தவறியவர்கள்
சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திசாநாயக்க இருவரும் நெருக்கடியின் போது நாட்டை வழிநடத்தத் தவறிவிட்டதாகவும், மாறாக அரசியலில் தங்கள் எதிர்காலத்திற்கு பயந்து அதிலிருந்து பின்வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரகலய போராட்டத்தை அடுத்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது அலுவலகத்திலிருந்து வெளியேறிய பின்னர் நாட்டை வழிநடத்துமாறு சஜித் பிரேமதாசவை அழைத்தார் ஆனால் அவர் மறுத்துவிட்டார் அதேபோன்று அனுர குமாரவையும் அழைத்தார் அவரும் மறுத்துவிட்டார்.இன்று அவர்கள் பொதுஜன பெரமுனவை விமர்சிக்கிறார்கள்.ஆனால் அவர்கள் நாட்டுக்காக பணியாற்ற கிடைத்த சந்தர்ப்பத்தை மறுத்துவிட்டனர் என தெரிவித்தார்.
ரணிலுக்கு பாராட்டு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவை பாராட்டிய மகிந்த, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவை பின்வாங்கிய நிலையில், பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் விக்ரமசிங்க என்று கூறினார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுன பல்வேறு அரசியல் பிரிவினரின் இலக்காகி, தேவையற்ற சேறுபூசல்களுக்கு முகங்கொடுத்து வருவதால், இந்த மே தினக் கூட்டம் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
"பொதுஜன பெரமுன மக்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதை ஒவ்வொரு அரசியல் தலைவரும் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் பெரமுனவின் 6.9 மில்லியன் ஆணையை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள முயல்கிறார்கள். இந்த அரசியல்வாதிகள் அவமானங்களைச் செய்கிறார்கள் மற்றும் பெரமுனவின் ஆதரவாளர்கள் தங்களிடம் வருவதற்கு பொறுமையாக காத்திருக்கிறார்கள்," என்று ராஜபக்ச கூறினார்.
தந்திரோபாயங்களுக்கு அடிபணிய வேண்டாம்
எனவே, ஏனைய கட்சிகளின் தந்திரோபாயங்களுக்கு அடிபணிய வேண்டாம் எனவும், கட்சிக்குள் எத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயற்படும் அதேவேளை, சிறி லங்கா பொதுஜன பெரமுனவுடன் உறுதியாக இருக்குமாறும் முன்னாள் அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதிருப்திக்குள்ளான பெரமுனஉறுப்பினர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புமாறும்,எதிர்வரும் அதிபர் தேர்தலில் கட்சியினால் அங்கீகரிக்கப்பட்ட பெரமுன வேட்பாளர் மாத்திரமே வெற்றியீட்டுவார் என நம்பிக்கையுடன் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவை விமர்சிக்கும் அரசியல்வாதிகளுக்கு கொள்கைகள் கிடையாது என ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |