இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நடந்த விடயம்! பிரதமர் பெருமிதம்
மேடை நாடக கலைஞர்களுக்கு அரசாங்கம் காப்புறுதி தொகையை செலுத்தி ´ப்ரேக்ஷா´ காப்புறுதியை வழங்குவது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இடம் பெறுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று பிற்பகல் அலரி மாளிகையில் தெரிவித்துள்ளார்.
மேடை கலைஞர்களுக்கான ´ப்ரேக்ஷா´ விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதியை மேடை நாடக கலைஞர்களுக்கு வழங்கும் நிகழ்வின் தொடக்க விழாவின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் டவர் மண்டப அரங்க அறக்கட்டளை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ப்ரேக்ஷா விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதி ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தால் செயற்படுத்தப்படுகிறது.
அதற்கமைய, ஒரு உறுப்பினர் மரணித்தால் 2 இலட்சம் ரூபாயும், திடீர் மரணம் ஏற்பட்டால் 600,000 ரூபாயும், முழுமையாக ஊனமுற்றால் நான்கு இலட்சம் ரூபாயும், கடுமையான நோய் காப்புறுதிக்கு மூன்று லட்சம் ரூபாயும், வைத்தியசாலையில் அனுமதிக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 150,000 ரூபாயும், வெளிநோயாளர் சிகிச்சைக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வரையிலும் வழங்கப்படும்.
இலங்கை கலை மன்றத்தால் வெளியிடப்பட்ட ´கலை இதழ்´ மற்றும் ´புத்தர் சிலை நிர்மாணக் கலை´ ஆகிய நூல்களின் முதல் பிரதிகள் இலங்கை கலை மன்றத் தலைவர் பேராசிரியர் ஜெயசேன கோட்டேகொட அவர்களினால் பிரதமருக்கு வழங்கப்பட்டது.
ப்ரேக்ஷா விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதிகளை வழங்கும் திட்டத்தை குறிக்கும் வகையில் குறியீட்டு ரீதியாக கௌரவ பிரதமரின் கரங்களினால் மேடை நாடக துறையின் சிரேஷ்டகலைஞர்களுக்கு காப்புறுதி பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



