காலி கோட்டையின் பிரதான கதவு அகற்றப்பட்டது ஏன்? மத்திய கலாச்சார நிதியம் விளக்கம்
காலி கோட்டையின் பிரதான கதவு பழுது பார்த்தல் வேலைக்காகவே அகற்றப்பட்டதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
17 ஆம் நூற்றாண்டில் காலி கோட்டையை நிர்மாணித்த டச்சுக்காரர்களால் அதன் பிரதான வாயிலில் 3.79 மீட்டர் உயரமும், 2.59 மீட்டர் அகலமும், 18 சென்ட் மீட்டர் தடிமனும் கொண்ட கதவு நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
அண்மையில் அக் கதவு அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தது. கதவு நிரந்தரமாக அகற்றப்பட்டுவிட்டது என மக்கள் மத்தியில் வதந்திகள் எழுந்தன.
இது தொடர்பாக மத்திய கலாச்சார நிதியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இரும்பினால் செய்யப்பட்ட கதவு பாழடைந்த நிலையில் இருந்ததாகவும், புதுப்பிக்கும் பணிக்காக அது அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக தொல்பொருள் திணைக்களம் 2007 ஆம் ஆண்டு இக் கதவை புனரமைத்திருந்தது தற்போது நாம் புனரமைக்கின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வேலை அல்ல என்பதால் கதவைப் பாதுகாக்கவும் மீண்டும் பொருத்தவும் இன்னும் நிதி கிடைக்கவில்லை. ஆனால் கதவு விரைவில் பொருத்தப்படும் என அதிகாரி உறுதியளித்திருந்தார்.


