மைத்திரி - சஜித் ரகசிய பேச்சு! பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்
இலங்கையின் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு இடையே இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
புலனாய்வுப் பிரிவு இதுகுறித்த அறிக்கை ஒன்றை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கடந்த வார இறுதியில் கையளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், முன்னாள் அரச தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவும் இரகசிய பேச்சுக்களை நடத்திவருவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல்கள் அடங்கிய சிறப்பு அறிக்கை ஒன்றை புலனாய்வுப் பிரிவுப் பிரதானி, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கடந்த வார இறுதியில் கையளித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தப் பின்னணியிலேயே சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும், அரச தலைவர் கோட்டாபயவுக்கும் இடையேயான சந்திப்பும் நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.
எனினும் இந்த சந்திப்பில் இரகசிய பேச்சுக்கள் குறித்து எந்த விடயமும் அரச தலைவர் கோட்டாபயவினால் வினவப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எந்த வழியிலும் சஜித் பிரேமதாஸவுடன் இரகசிய பேச்சுக்களை நடத்துவதற்கான அவசியம் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், தற்போதைய கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்குள் மைத்திரி அணியினர் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக விமர்சனங்கள் தொடர்ந்தும் காணப்படுகின்ற நிலையிலேயே நேற்றைய தினம் கோட்டாபயவுக்கும், மைத்திரி அணிக்கும் இடையே நீண்டநேர பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.