எனது தலைமையிலான கட்சி ஒருபோதும் இணங்காது! திட்டவட்டமாக அறிவித்தார் மைத்திரி
எந்த தேர்தலையும் ஒத்திவைக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணங்காது என அதன் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கட்சிக்காக புதிய ஊடக நிலையம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். இதன்போது பேசிய அவர்,
“ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் இருந்தும் ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்ததன் பலனை இறுதியில் நாடு மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் அனுபவிக்க நேரிட்டது எனவும் அப்படியான நிலைமை மீண்டும் ஏற்பட இடமளிக்க போவதில்லை.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் நாட்டின் முதன்மை மற்றும் வலுவான அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
இதன்போது, சஜித் பிரேமதாசவுடன் கூட்டணியை ஏற்படுத்துவீர்களா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மைத்திரி, அப்படியான எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அரசியல் கூட்டணியே எதிர்காலத்தில் உருவாகும் எனவும் சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவரும் அந்த கூட்டணியில் இணைந்துகொள்ள முடியும் என்றார்.