மைத்திரி கடந்த இரண்டு வருடகாலமாக நித்திரை கொண்டாரா? செஹான் சேமசிங்க காட்டம்
சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் அரசதலைவருமான மைத்திரிபால சிறிசேன கடந்த இரண்டு வருடகாலமாக நித்திரை செய்து விட்டு தற்போது எழுந்துள்ளதை போன்று அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார் என நுண்கடன் மற்றும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
"சுதந்திர கட்சியின தலைவர் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் அரச வரபிரசாதங்களை முழுமையாக அனுபவித்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள்.
அரசாங்கத்தின் கொள்கை தவறு என்றால் அவர்கள் தாராளமாக அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம். சுதந்திர கட்சியினரது செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்.
சுதந்திர கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
அதேவேளை கூட்டணியின் பிரதான பங்காளி கட்சியாக சுதந்திர கட்சி அங்கம் வகிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.